Tuesday, September 22, 2009

மனிதனே - மனிதன் - மனிதனா ?

மனிதன் மனிதனாக இருந்தால் முகவரிகள் எதற்கு? மனிதம் இல்லா மனிதனுக்கு முகமும் இல்லை. முகம் இல்லாதவனுக்குத்தான் முகவரி தேவை! என் முகத்தில் ஏகப்பட்ட கவலை வரிகள்! (வயது தெரிகிறதா?)

காந்தி சந்தை
க்கு சென்றிருந்தேன். காலை 11 மணி. வெயில் தகித்தது. சிறு சிறு குடைகளுக்குள் தரைக்கடை வியாபாரிகள். எனது நிரந்தர வாடிக்கை வியாபாரியிடம் தக்காளி வாங்கச் சென்றேன். முதியவர் குடை நிழலில் சுருண்டு உறங்கிக் கொண்டிருந்தார். அவரது மகன் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் " வாங்க பாய்.. எவ்வளவு வேணும்? என்றான். "2 கிலோ நல்லதாக போடு " என்றேன். எங்களது உரையாடலின் ஓசையில் முதியவர் உறக்கம் கலைந்து எழுந்தார். கைகளை உரசி முகத்தை துடைத்தவர் " பேட்டே (உருதுவில் மகனே என்று அர்த்தம்) ஸல் என்ன சொல்லியிருக்கிறார் என்றால் நாம் சாப்பிடும் உணவு மீசை முடிகளில் படக்கூடாது. அது பாவம். எனவே மீசை முடியை ஒட்ட நறுக்கி விடு" என கூறி விட்டு மீண்டும் படுத்துவிட்டார். நான் "சரிங்க அத்தா" என கூறிவிட்டு தக்காளியுடன் திரும்பினேன்.
இதையெல்லாம் பக்கத்து கடையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த எனது நண்பர் " என்ன பாய், எப்ப
சார்முஸ்லீம் ஆனீங்க?" என சிரித்துக் கொண்டே கேட்டார். "ஆம். நான் எப்பவுமே "BOY"தான்"GIRL"கிடையாது. அதில் இது நாள் வரை எந்தவித மாற்றமும் வரவில்லை. எனவே என்னை யார் பாய் என்று அழைத்தாலும் நான் மறுப்பேதும் தெரிவிப்பதில்லை என்றேன். மேலும் ஸல் என்பதும் கடவுள்தானே! அவர் கூறுவதும், சுகாதார முறைப்படியும், மீசை முடியில் உணவு படுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்லவே? எனவே நல்ல விசயங்கள் யார் யார் வாய் கேட்பினும் அதை அதன் படியே ஏற்றுக் கொள்வது என் பண்பு - என்றேன்.
" பல ஆண்டுகளாக நான் இங்கு வந்து செல்கிறேன். இங்குள்ள பெரும்பான்மையானவர்களும் என்னை " பாய்" என்றே விளிக்கிறார்கள். நான் அதை எப்பொழுதும் மறுப்பதில்லை " என்றேன். அதற்கு முக்கிய காரணம் தாடியுடன் கூடிய என் முகத்தோற்றமே! இதை நான்கறிவேன்.

வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலையிலேயே கோழி இறைச்சி வாங்க காந்தி சந்தைக்கு செல்வேன். அதுவும் ஒரு " பாய்"யின் கடைதான். என் மனைவியும் உடன் வருவாள். நாங்கள் கடையை நெருங்குவதற்குள் பாய் தன் ஊழியர்களிடம் பரபரப்பாக
நாங்கள்உட்கார பெஞ்சை துடைக்கச் சொல்வார். டேய்... பாயம்மா வந்திருக்காக..டீ சொல்லுடா..என்பார். பிறகு என்னிடம் 2ரூபாய் நாணயம் கேட்பார். அதை என்னிடமிருந்து வாங்கி பையனிடம் கொடுத்து "அஜர்த்தை கூட்டி வா" என்பார். சூடாக டீ வரும். சாபிட்டு முடிப்பதற்குள் அஜார்த்தும் வருவார். நரைத்த பழம். வெண்தாடி வேந்தர். 80 வயதிருக்கும். மெதுவான குரலில் திருமறை ஓதி கோழியை அறுத்துக் கொடுப்பார். பிறகு அதை பாய் சிறு துண்டுகளாக வெட்டி எங்களிடம் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வார். அப்படியாக எங்களுக்கு ஹலால் செய்த இறைச்சிதான் கிடைக்கும். அதையும் நான் என்றும் மறுத்தது இல்லை. இரத்தம் முழுவதும் வடிந்த இறைச்சியினால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்பது விஞ்ஞானம்.அதைத்தானே அஜர்த் செய்தார். நாம் ஏன் மறுக்க வேண்டும்? மதம் இங்கு என்ன செய்கிறது நம்மை ? அவரவர் அறிந்த உண்மைகளின் தொகுப்புதானோ அவரவர் வேதங்கள் ? அனைத்து உண்மைகளையும் அறிய முயல்வோம் - மதங்களை மறந்து - மனிதம் தேடி - மனிதம் நாடி.